Friday, 28 February 2025

Preface

 மெய்ஞான குருபரனைப் பூசைபண்ணு வித்தை தந்த சற்குருவை நிதமும் போற்று (அகத்தியர் யோகஞான திறவுகோல்-1) என்ற அகத்தியாரின் வாக்குப்படி மெய்ஞான குருவான மாணிக்கவாசகரையும் வித்தை தந்த குரு, மதுரையில் பல பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து எண்ணற்ற மாணவர்களின் மனதில் தமிழ்ப்பற்றை வளர்த்த 84 வயது இளைஞர் திரு சுப்பிரமணியம் சுவாமி அவர்களையும் வணங்கிவிட்டு திருக்கோவையாரினுள் புகலாம்.

தர்மம், அர்த்தம், காமம் மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களில் உச்ச இலக்கு மோட்சம். அந்த உச்ச இலக்குக்கு ஏற்ற ஆசைகளை, காமத்தையும் அந்த காமத்தைப் பெற அர்த்தம் எனப்படும் பொருள்களையும் (அவை வஸ்துக்கள், உபதேசங்கள், சத்சங்கம் என்றவையாக இருக்கலாம்) அந்த பொருள் ஈட்டுவதற்குத் தேவையான அடையாளங்கள் அல்லது அகங்காரத்தையும் அந்த அடையாளத்துக்கு ஏற்ற தர்மத்தையும் பேணுவதே வாழ்க்கை.

மோட்சம் என்பது என்ன? அது ஒருவர் சென்றடைய வேண்டிய இடமல்ல. இருக்கும் இடத்திலேயே பெறவேண்டிய ஒரு நிலை.  பரிபூரண சுதந்திரம். ஆத்மாக்கள், தமது சக்தி, ஞானம், சங்கல்பம் ஆகியவை அளவுக்குட்பட்டவை என்று எண்ணுகின்றன. உதாரணமாக, பணம் இல்லாதவர் தாம் பெரும் செல்வந்தரானால் பூரண சுதந்திரத்துடன் வாழலாம் என்று பணம் தேடுகிறார், தனக்கு சக்தியில்லை, ஞானம் இல்லை என்று எண்ணுபவரும் அவ்வாறு தனக்கு பூரண சுதந்திரத்தைத் தேடுகிறார். இந்த பூரண சுதந்திரம் பிறரைக் கட்டுப்படுத்துவது அல்ல. தன்னையே ஆள்வது. தன்னை வேறு ஒன்று, அது தனது எண்ணங்கள், நினைவுகளாகக்கூட இருக்கலாம், ஆளாத நிலையை அடைவதே மோட்சம். ஒவ்வொரு ஆத்மாவும் உலகவாழ்க்கை என்பதன் மூலம் இதைத்தான் தேடுகிறது. இந்தத் தேடலே காமம், விருப்பம், ஆசை. தனது உடல், மனம், கர்மம் என்று தன்னைக் கட்டுப்படுத்தும் காரணங்களைக் கடக்கவே ஒருவர் ஆன்மீக முயற்சிகளை மேற்கொள்கிறார். இந்த முயற்சியின் இலக்கை, பூரண விடுதலையை ஒவ்வொரு ஆத்மாவும் காமத்தில் அனுபவிக்கிறது. அந்த அனுபவத்தில் ஒருவர் தனது உடல், மனம், தான் என்ற உணர்வு ஆகியவற்றை ஒரு நொடி நேரம் கடந்து பூரண விடுதலையை அனுபவிக்கின்றார், ஏதோ ஒரு நிலையில் கரைந்து போகிறார்.. இவ்வாறு தான் என்று எண்ணியவற்றை, தன்னை அளவுக்கு உட்பட்டவர் என்று நினைக்க வைக்கும் பொருள்களைக் கடப்பதே மோட்சம் எனப்படுகிறது.

இதனால் காமம் என்பதை எல்லா உயிர்களும் தேடுகின்றன, இந்த பூரண விடுதலையை அனுபவிக்க முயல்கின்றன. இறைவனும் காமேஸ்வரன் காமேஸ்வரி என்றும் தேவி காமாட்சி காமாக்கியா என்றும் அழைக்கப்படுகின்றனர்.  உயிர்களிடம் உள்ள இந்த காமம், மற்றொரு உயிரை உருவாக்கக்கூடிய மிகப்பெரிய சக்தி. உயிர்களிடம் உள்ள உச்ச சக்தி. உடல் சார்ந்தது காமம் என்றால் மனம் சார்ந்தது காதல். அதனால் மாணிக்கவாசகர் உச்ச விடுதலையைப் பெறும் முயற்சியை காதல் என்ற தளத்தின் மூலம் நமக்குப் புரிய வைக்க முயல்கிறார்.  இப்பாடல்களை விளக்கிய உரையாசிரியர்கள் அவற்றை சிற்றின்ப நிலை, பேரின்ப நிலை என்ற இரு நிலைகளில் விளக்கியுள்ளனர். இந்த நூலைப் படிக்கும்போது இதில் உள்ள வர்ணனைகளையும் விளக்கங்களையும் ஒருவர் இந்த கருத்துக்களை மனத்தில் கொண்டு படித்தால் இது சிற்றின்ப நூல் அல்ல, பரிபூரண ஆனந்த நிலையை, மோட்சத்தைப் பெற உதவும் வழிமுறை என்பதைப் புரிந்துகொள்வார்.

 

Before delving into Thirukkovaiyar, let us first pay homage to the enlightened Guru, Manikkavasagar, and to the esteemed vidya guru, Tamil scholar, Shri Subramaniam Swami—a youthful 84-year-old teacher who, through his service in various schools across Madurai, has instilled a deep love for Tamil in countless students. Salutations to his enthusiasm and inspiration.

Among the four Purusharthas—Dharma (righteousness), Artha (wealth), Kama (desire), and Moksha (liberation)—the highest pursuit is Moksha. Life is about cultivating desires (kama) that align with this ultimate goal, and acquiring Artha (the necessary means), through assuming identities (Ahamkara) necessary to attain those means, and following the dharmas that correspond to the identities.

What is Moksha? It is not a distant place to be reached but a state to be realized here and now.  It is absolute freedom. Souls feel they are limited by several factors such as time, space, circumstances, capacities, and knowledge that prevent them from being free. For instance, a person without wealth believes that acquiring riches will grant him complete freedom, so they pursue wealth. Likewise, one who feels powerless or ignorant seeks knowledge or strength with the hope of enjoying total freedom.  This freedom is not acquiring the ability to control others but not being  controlled by others, even by one’s thoughts and memories. This is Moksha. Every soul, through the journey of worldly life, is ultimately seeking this liberation.

This very search manifests as Kama, desire. Individuals undertake spiritual practices to transcend the limitations imposed by the body, mind, and karma. The ultimate goal of these efforts—absolute liberation—is momentarily experienced by every soul during a physical union.  In such moments, one transcends bodily awareness, mental conditioning, and even the sense of self, and dissolves into a state beyond words. For this reason, all lifeforms seek Kama—in reality, they are striving to experience this absolute liberation.  Hence, Shiva is revered as Kameshwara, and Shakti as Kameshwari, Kamakshi, or Kamakya. Kama, the force of desire, is the most potent power within a living being,  for it holds the capacity to create life itself. If Kama is its physical form, Love is its mental and emotional state. That is why Manikkavasagar conveys the journey to ultimate liberation through the language of love.

When one reads Thirukkovaiyar with this understanding, its verses and descriptions transcend mere expressions of worldly pleasure and reveal themselves as a profound guide to attaining supreme bliss and liberation. Scholars and commentators have explained the text in the context of sitrinbam or limited or physical bliss and perinbam or supreme bliss.  Let us begin this journey with these points in mind. 

Thursday, 27 February 2025

Greatness of the composition

                                                             நூல் சிறப்பு

ஆரணங் காணென்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின்

காரணங் காணென்பர் காமுகர் காம நூலது என்பர் 

ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்

சீரணங் காய சிற்றம்பலக் கோவையை செப்பிடினே

பொருள்: திருக்கோவையாரை சொன்னால் வேதம் ஓதும் அந்தணர் இந்த நூல் வேதத்தின் பொருள் என்பர், ஆகமத்தை கடைப்பிடிக்கும் யோகியர் இது ஆகமத்தின் காரணம் என்பர்.  காமுகரோ இது சிற்றின்ப நூல் என்பர்.  தர்க்க சாத்திரத்தில் வல்லவர் இது தர்க்க நூல் என்பர், புலவரோ இது நற்சொற்களின் தொகுப்பு என்பர்.  

அணங்கு- தேவமாது. இங்கு சக்தியைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.  ஆர்+அணங்கு+ஆண் என்று இந்த சொல்லைப் பிரித்தால், சிவசக்திகளைக் குறிப்பதைப்போல உள்ளது.

சிவபெருமானின் ஆணையின்படி இயற்றப்பட்ட  திருக்கோவையாரின் முக்கிய குறிக்கோள் எவ்வாறு ஜீவன் சிவனை அடைகிறது என்பதை விளக்குவதே.  இந்த நூல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தோன்றும் என்று குறிப்பிடுவதன் நோக்கம், இலக்கு ஒன்றானாலும் பாதைகள் பல என்பதைக் காட்டுவதே.

நமது புலன்கள் என்ற கருவிகள் காட்டும் காட்சியைத்தான் நாம் உலகம் என்று பார்க்கிறோம்.  ஒருவரது கருவிகளுக்கேற்ப அவருக்கு உலகம் ஒருவிதமாகக் காட்சியளிக்கிறது. அதேபோல் இப்பாடல்கள் அந்தணருக்கு வேதமாக, யோகியருக்கு ஆகமமாக, காமுகருக்கு காம நூலாகவும் அவரவரது உணர்வு நிலைக்கேற்ப தோன்றுகிறது. இந்த நிலையே சிற்றம்பலம் அல்லது சித்தின் வெளிப்பாடு என்று கூறப்படுகிறது. கருவிகளினால் பெறும் உணர்வு நிலைகளைக் கடந்து பேரின்ப நிலையை அடைந்தவருக்கு இப்பாடல்கள் சிவமாகவே தில்லைச் சிற்றம்பலமாகவே காட்சியளிக்கும் என்பது திண்ணம். 

Greatness of the composition

The Vedics would say, see it is the Veda, the yogin would say

The cause of Agama, the desirous would say it is a book of physical pleasure

The logicians would say it is a book of logic, the sweet poets would say it is book of words

When the beautiful Citrambala kovai is uttered.

 

If one recites the Thirukkovaiyar, Vedic scholars will say that this text is the essence of the Vedas; Yogis who follow the Agamas will claim that it is the cause of the Agamas; lovers will consider it a book of sensual pleasures; logicians will perceive it as a treatise on logic; and poets will regard it as a collection of refined verses.

The term "Anangu" refers to a divine maiden, and here, it can be interpreted as Shakti. When the word is split as "Aar + Anangu + Aan", it appears to refer to the glorious Shiva Shakti.

Thirukkovaiyar, composed as per the command of Lord Shiva, primarily aims to explain how the individual soul (Jīva) unites with Shiva. The reason for stating that this work appears differently to different people is to highlight that though the goal is one, the paths are many.

The world we perceive is merely a projection of information our senses present. Just as the world appears differently to each person based on their sensory perception, these verses too take on different meanings depending on one’s state of mind. To a Vedic scholar, they resonate as the Vedas; to a Yogi, as Agamas; to a lover, as a text of romance—each experiencing the text according to their state of consciousness.

These states of perception are known as Chitrambara (the arena of consciousness). However, one who transcends sensory-based experiences and attains the supreme bliss (Perambalam or the great arena) then these verses may appear as Shiva himself. 

Wednesday, 26 February 2025

Prayer to Vinayaka

                                                        விநாயகர் வணக்கம்

எண்ணிறைந்த தில்லை எழு கோபுரம் திகழக்

கண்ணிறைந்து நின்று அருளும் கற்பகமே நண்ணிய சீர்த்

தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற

நானூறும் என் மனத்தே நல்கு

 

பொருள்:

எண்ணுவதற்கரிய பெருமையுடையதும் எனது எண்ணத்தை நிலைத்திருக்க வைப்பதும், எழு கோபுரம் உடையதுமான தில்லையில் உள்ள, எனது கண்களை நிறைத்து  நின்று அருளும் கற்பகமே! குறையாத சீரையுடைய, அமிர்தத்தை ஊறச் செய்யும், செம்மையான சொற்களைக் கொண்ட  திருக்கோவை என்கின்ற இந்த  நானூறு பாடல்களையும் எனது மனதில் தோன்ற, நிலைத்திருக்க அருளுவாய். 

இப்பாடலை மாணிக்கவாசகர் எழுதவில்லை, பிற்காலத்தில் ஏற்பட்ட இடைச் செருகல் என்பர். தில்லையின் மேற்கு கோபுரத்தின் அருகில் உள்ள தல விநாயகரின் பெயர் கற்பக விநாயகர் என்பதாகும்.

இப்பாடலில் உள்ள எழு கோபுரம் என்பதற்கு வானளாவ எழுந்த கோபுரம் என்றும் ஏழு நிலைகளைக் கொண்ட பிரதான வாயிலான கிழக்கு கோபுரம்  என்றும் பொருள் கொள்ளலாம்.  சைவக் குரவர்கள் நால்வரும் ஒவ்வொரு வாசல் வழியாக கோவிலினுள் வந்து இறைவனை வழிபட்டனர் என்றும் மாணிக்கவாசகர்  கிழக்கு கோபுரத்தின் வழியாக கோவிலினுள் வந்தார் என்றும் வரலாறு கூறுகிறது.  இந்த வாயிலின் உட்புறம் பதினான்கு தூண்களில் நூற்றியெட்டு கரணங்களைக் காட்டும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஆடலாரசனான நடராஜப் பெருமான் நகர்வலத்துக்கு வருவது இந்த வாயிலின் வழியாகத்தான்.  

கோ என்ற சொல் பசு என்றும் ஒளி என்றும் பொருள்படும். இவ்வாறு கோபுரம் என்பது பசுவின் இடம் என்றும் ஒளியின் இடம் என்றும் பொருள் தருகிறது. ஒளியின் இடம் பரவுணர்வு நிலை என்று கொண்டால் கற்பகம் போல பலன் தரும் அந்த உணர்விடம் தேன் போன்ற திருக்கோவையார் தனது மனதில் தோன்ற மாணிக்கவாசகர் பிரார்த்திக்கிறார் என்று இங்கு பொருள் கொள்ளலாம். 

Praise to Vinayaka

Tillai with seven gopuram that remains filling the mind

The wish fulfilling tree (karpaka) that fills the eyes and blesses,

The supremely sweet words, the four hundred called Tirukkovai

Grant them in my mind.

The verse mentioned is said to be an interpolation added later and not originally composed by Manikkavasagar. It is a prayer to Ganapathy who is addressed as Karpaka, the wish-fulfilling tree seeking his grace to let the 400 verses of Thirukkovaiyar arise in the poet’s mind and remain firmly there. Tillai or Chidambaram is praised as the place that is beyond comprehension, the sacred place that steadies the mind and the place with seven towering gopura.

 

Near the western tower of the Chidambaram temple, there is a shrine dedicated to Thala Vinayakar, also known as Karpaka Vinayakar. The reference to “seven towers” in the verse may be interpreted as either the towering gopurams of the temple or the grand eastern entrance with seven levels. According to historical accounts, the four great Saiva saints entered the temple through different gates. Manikkavasakar is said to have entered through the eastern gopuram. This entrance features fourteen pillars adorned with sculptures depicting 108 Karanas (dance postures). It is through this entrance that Nataraja, the Lord of Dance, is taken out in procession.

The word ‘go’ means pasu or soul as well as light. Gopuram means place of the soul and the place of light. Thus, the verse is Manikkavasakar's prayer to the supreme consciousness to make the sweet words of Thirukkovaiyar occur in his mind. 

Links to some commentaries

 The following are links to some of the commentaries on Tirukkovaiyar.

திருக்கோவையாரின் சில விளக்கவுரைகள்

https://archive.org/details/Tirukkovaiyar/page/1/mode/1up?view=theater- English translation of verses with detailed explanation of the genre.  பாடல்கள் மட்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அகத்திணை விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

https://archive.org/details/acc.-no.-27919-thirukovaiyar-2016/page/1/mode/1up?view=theater- Dhandapani Desikar’s commentary in Tamil- philosophical- தண்டபாணி தேசிகரின் விளக்கவுரை- பாடல்களின் பொருள் பேரின்ப நிலையில் மட்டும் விளக்கப்பட்டுள்ளது.

https://temple.dinamalar.com/news_detail.php?id=5701- Perasiriar’s commentary in Tamil with a short sutra on the content of the verse. பேராசிரியரின் விளக்கவுரை. சிற்றின்ப நிலையில் பெரும்பான்மையான விளக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் அதன் கருத்தைத் தரும் கொளு சூத்திர வடிவில் உள்ளது.

https://panniruthirumurai.org/books/8thirumurai2.pdf- Tamil commentary based on Perasiriyar’s explanation பேராசிரியரின் விளக்கவுரையின் அடிப்படையில் உள்ள தமிழ் விளக்கவுரை 

Introduction 2

                                                                       Introduction-2

இந்த நூலின் முழுப்பெயர் பெரிய திருச்சிற்றம்பலக் கோவையார் என்பது. பல உயர்ந்த பொருள்களை ஒன்றாக ஒரு கிரமத்தில் கோப்பது கோவை எனப்படும். இது ஒன்றை ஒன்றுடன் கோர்பது என்று பொருள்படும் யோகம் என்ற வடமொழிச் சொல்லைப் போன்றது. இங்கு கோக்கப்படுவது ஜீவனும் சிவனும்.

இந்த நூலுக்கு சீர்காழி தாண்டவராய பிள்ளை, பேராசிரியர், தண்டபாணி தேசிகர் ஆகியோர் விரிவாக உரை  எழுதியுள்ளனர். ஆகம வழி வந்த ஞான யோக நுண்பொருள்களை உணர்த்துவது எளிதல்ல. அதை காதல்வயப்பட்ட பாடல்களால் மட்டுமே உணர்த்த இயலும் என்று கூறும் பேராசிரியர்  சிற்றின்பம் என்பது பேரின்பத்துக்கு உவமை. பக்திக்கு உவமை உயிர்கள் கொண்டிருக்கும் பாசம், பந்தம். அன்பே சிவம் என்று காட்டவே சிவம் காதலாகத் தோன்றுகிறது என்று கூறுகிறார்.

திருக்கோவையார் தோன்றியதற்கு அருளே காரணம். அந்த அருளே நம்மை இறைவனொடு கூட்டுகிறது.

பாத்திரங்கள்:

இறைவன்- தலைவி, பக்குபவப்பட்ட ஆன்மா- தலைவன், அவனது தத்போதம் எனப்படும் தன்னுணர்வு- நண்பன். இறையருள்- பாங்கி, பராபரை அல்லது பரமேஸ்வரி-பெற்ற தாய், திரோதான சக்தி- செவிலித்தாய்.

இப்பாடல்களில் தலைவனும் தலைவியும் ஒன்றையே எண்ணுகின்றனர், ஒன்றையே பேசுகின்றனர். ஒன்றையே முயற்சிக்கின்றனர். தலைவி தில்லை சிற்றம்பலம், அவளே அருளைத் தரும் அன்னபூரணி. அவளது அருளைப் பெறுபவன் சிற்றம்பலம் உடையான்.

இந்தப் பாடலின் களம் நெய்தல் நிலம். அதன் உரிப்பொருள் பிரிவும் பிரிவாற்றாமையும். இவ்வாறெனினும் பிற நிலங்களும் இதில் இடம் பெறுகின்றன. இறைவனை எல்லா நிலத்தில் உள்ளவர்களும் துதிக்கின்றனர் என்பதைக் காட்ட எல்லா நிலங்களின் கருப்பொருள்களும் இங்கு தத்துவங்களை விளக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.

இனி பாடல்களைப் பார்ப்போம்.

The full title of this work is Periya Thiruchitrambala Kovaiyar. "Kovai" refers to stringing multiple profound concepts in a structured manner. It is similar to word Yoga which means to bind or unite. In this context, the individual soul (Jiva) and the Lord (Siva) are strung together by various factors.

This work has been extensively commented upon by scholars such as Seerkazhi Thandavaraya Pillai, Perasiriyar and Tandapani Desikar. According to Perasiriyar, it is difficult to explain Agama-based wisdom and yoga.  Such deep truths can only be conveyed through love-laden verses. Earthly pleasure is an analogy for divine bliss. Human attachments are analogies to devotion.  Thus, divine love, anbe Sivam or Sivam is love, can only be explained through earthly love.

Characters in the Work:

  • Lord Shiva – The heroine (Thalaivi)
  • The soul (Jīva) – The hero (Thalaivan)
  • The soul’s sense of self (Tatbodha or self-awareness) – Hero’s friend
  • Divine grace – Heroine’s friend
  • The Supreme Goddess (Parāparai or Parameshwari) – the mother
  • The veiling power (Tirodhāna Shakti) – The nursemaid

In these verses, both ther hero and the heroine think alike, speak alike and strive for the same goal. The heroine is referred to as Thillai Citrambalam.  She is Annapoorani, the giver of divine grace, and the one who receives her grace is Citrambalam udayan (the one who possesses Citrambalam- this was Siva’s signature upon completion of recording Manikkavasakar’s Tiruvasakam.

The setting of these verses is primarily Neythal land (coastal region), which symbolizes separation and the pain of longing. However, elements from other landscapes are also incorporated in these verses to emphasize that devotees from all regions praise the Lord.

Now, let us proceed to the verses.

Tuesday, 25 February 2025

Thirukkovaiyar

                                                                

திருக்கோவையார்

Introduction-1

இந்த சிவராத்ரி தொடங்கி மாணிக்கவாசகரின் திருக்கோவையாரைப் படிக்கலாம் என்று ஒரு விருப்பம்.  அவன் அருளாலே அவன் தாள் வணங்கி தொடங்கப்படும் இம்முயற்சியை அவனது சங்கல்பம் வழிநடத்தட்டும்.

மாணிக்கவாசகரின் திருவாசகம் நம்மில் பல அறிந்த ஒரு நூல். அதில் 51 தலைப்புகளில் மாணிக்கவாசகர் இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். அவரது பாடல்களைப் பட்டோலை செய்த இறைவன் ‘பாவை பாடிய வாயால் கோவை பாடு’ என்று ஆணையிட அதனை ஏற்று அவர் பாடிய நூல் திருக்கோவையார். 51 என்ற எண் மாத்ருகா அக்ஷரங்கள் எனப்படும் சமஸ்கிருத எழுத்துக்களைக் குறிக்கும். இந்த எழுத்துக்கள் சக்தி துகள்கள். அவற்றால் புனையப்படுவதே பதங்கள் எனப்படும் சொற்களும் மந்திரங்கள் எனப்படும் வாக்கியங்களும். இவை ஒரு சாதகருக்கு இறைவனின் அருளையும் புவனம் எனப்படும் சிவலோக பதவியையும் போகம் எனப்படும் சிவானந்தத்தையும் அளிக்கின்றன. இந்த பயணத்தைக் குறிப்பதே திருக்கோவையார்.

அகத்திணை எனப்படும் காதல் பாட்டைப் போல புனையப்படுள்ள இந்த நூல் 25 அதிகாரங்களைக் கொண்டது. இது 24 ஆத்ம தத்துவங்களையும் அவற்றால் உருவாக்கப்படும் ஆத்ம நிலையையும் குறிப்பதைப் போல உள்ளது. ஆன்மா மேற்கொள்ளும் இந்த பயணத்தில் இடம்பெறும் பல காரணிகள் பல பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, சிவன் சிவத்தலைவியாகவும் ஆன்மா தலைவனாகவும் தான் என்னும் தத்போதம் தலைவனின் தோழனான பாங்கனாகவும் இறையருள் தலைவியின் தோழியாகவும் குறிக்கப்படுகின்றனர்.

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே எவ்வித முன்னேற்பாடும் இன்றி இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்து சிறிது காலத்துக்குப் பிறகு அவர்கள் பிரிந்துவிடுகின்றனர். பிரிவாற்றாமையால் அவர்கள் படும் துன்பத்தையும் அதனை நிவர்த்தி செய்ய அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் களமாகக் கொண்டு ஆன்மா எவ்வித முயற்சியுமின்றி ஒரு குறுகிய காலத்துக்கு சிவானுபவம் பெற்று பின் அதனை இழந்து வருந்துவதையும் அதனை மீண்டும் பெறத் துடித்து மேற்கொள்ளும் முயற்சிகளையும் மாணிக்கவாசகர் மிக நுணுக்கமாக  விளக்கியுள்ளார்.