Tuesday, 25 February 2025

Thirukkovaiyar

                                                                

திருக்கோவையார்

Introduction-1

இந்த சிவராத்ரி தொடங்கி மாணிக்கவாசகரின் திருக்கோவையாரைப் படிக்கலாம் என்று ஒரு விருப்பம்.  அவன் அருளாலே அவன் தாள் வணங்கி தொடங்கப்படும் இம்முயற்சியை அவனது சங்கல்பம் வழிநடத்தட்டும்.

மாணிக்கவாசகரின் திருவாசகம் நம்மில் பல அறிந்த ஒரு நூல். அதில் 51 தலைப்புகளில் மாணிக்கவாசகர் இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். அவரது பாடல்களைப் பட்டோலை செய்த இறைவன் ‘பாவை பாடிய வாயால் கோவை பாடு’ என்று ஆணையிட அதனை ஏற்று அவர் பாடிய நூல் திருக்கோவையார். 51 என்ற எண் மாத்ருகா அக்ஷரங்கள் எனப்படும் சமஸ்கிருத எழுத்துக்களைக் குறிக்கும். இந்த எழுத்துக்கள் சக்தி துகள்கள். அவற்றால் புனையப்படுவதே பதங்கள் எனப்படும் சொற்களும் மந்திரங்கள் எனப்படும் வாக்கியங்களும். இவை ஒரு சாதகருக்கு இறைவனின் அருளையும் புவனம் எனப்படும் சிவலோக பதவியையும் போகம் எனப்படும் சிவானந்தத்தையும் அளிக்கின்றன. இந்த பயணத்தைக் குறிப்பதே திருக்கோவையார்.

அகத்திணை எனப்படும் காதல் பாட்டைப் போல புனையப்படுள்ள இந்த நூல் 25 அதிகாரங்களைக் கொண்டது. இது 24 ஆத்ம தத்துவங்களையும் அவற்றால் உருவாக்கப்படும் ஆத்ம நிலையையும் குறிப்பதைப் போல உள்ளது. ஆன்மா மேற்கொள்ளும் இந்த பயணத்தில் இடம்பெறும் பல காரணிகள் பல பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, சிவன் சிவத்தலைவியாகவும் ஆன்மா தலைவனாகவும் தான் என்னும் தத்போதம் தலைவனின் தோழனான பாங்கனாகவும் இறையருள் தலைவியின் தோழியாகவும் குறிக்கப்படுகின்றனர்.

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே எவ்வித முன்னேற்பாடும் இன்றி இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்து சிறிது காலத்துக்குப் பிறகு அவர்கள் பிரிந்துவிடுகின்றனர். பிரிவாற்றாமையால் அவர்கள் படும் துன்பத்தையும் அதனை நிவர்த்தி செய்ய அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் களமாகக் கொண்டு ஆன்மா எவ்வித முயற்சியுமின்றி ஒரு குறுகிய காலத்துக்கு சிவானுபவம் பெற்று பின் அதனை இழந்து வருந்துவதையும் அதனை மீண்டும் பெறத் துடித்து மேற்கொள்ளும் முயற்சிகளையும் மாணிக்கவாசகர் மிக நுணுக்கமாக  விளக்கியுள்ளார். 

No comments:

Post a Comment