பாடல் 16
அஞ்சும்மூணும் எட்டதாய் அநாதியான
மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச்
செபிப்பீரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி
செய்யினும்
பஞ்சுபோல் பறக்கும் என்று
நான்மறைகள் பன்னுமே.
(பத)
அஞ்சு என்பது ஐந்தெழுத்தான நமசிவாய. மூணு என்பது அ உ ம எனப்படும் ஓம் ஆகும். இந்த எட்டெழுத்து மந்திரத்தை ஒருவர் மனத்தினுள்
ஜெபித்தால் மிகக் கொடிய பாதகங்கள் எனப்படும் பிறன் மனைவிழைதல், கொலை, கற்பழிப்பு,
குருநிந்தனை, பொய்பேசுதல் என்ற ஐந்து பாவங்களும் பஞ்சைப் போல பறந்துவிடும் என்று
நான்மறைகளும் கூறுவதாக சிவவாக்கியர் கூறுகிறார்.
இப்பாடல் சித்தர்கள் வேதத்தை மதிக்காதவர்கள் என்ற கூற்றை
பொய்யாக்குகிறது. சித்தர்கள் வேதத்தின்
உட்பொருளை அனுபவத்தினால்
உணர்ந்தவர்கள்
என்பதை மெய்ப்படுத்துகிறது.
பஞ்சாட்சாரத்தின் பெருமையைத
திருமூலர் தனது திருமந்திரத்தில் தந்திரம்
ஆகியவற்றில் விளக்கியுள்ளார். அகத்தியர் தனது திருமந்திர விளக்கம் என்ற
நூலில் பஞ்சாட்சரம் சிவனின் ஒவ்வொரு முகத்துக்கும் இருபத்து ஐந்து விதமாக, மொத்தம்
நூற்று இருபத்து ஐந்து விதமாக பல்வேறு பலன்களை அளிப்பதாக உள்ளது என்று கூறுகிறார்.
பாடல் 17
அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாசல் ஆயிரம்
இந்தவாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாய்
எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே?
(பத)
உயிர்கள் உலகினுள் பல்லாயிரக்கணக்கான
வாசல்களின் (யோனிகளின்) மூலம் வருகின்றன. இவையனைத்தும் இருக்கும் வாசல்கள்
அல்ல. இறைவன் இருக்கும் ஒரே வாசல்
சஹஸ்ராரம் எனப்படும் தலைவாசல் மட்டுமே.
அங்கே ஜீவனும் இறைவனும் கூடி பேரின்பத்தை அனுபவிக்கின்றனர். அதுவே
ஏகபோகவாசல். முழுமுதலான இன்பம் இருக்கும் இடம்.
அதனைக் காணக் கூடியவர் யார் என்று சிவவாக்கியர் வினவுகிறார்.
சித்தர் இலக்கியத்தில் வாசல் என்பது மிக முக்கியமானதாகக்
கருதப்படுகிறது. அது ஒரு நிலைக்கும்
மற்றொரு நிலைக்கும் இடைப்பட்ட எல்லைக்கோடு.
ஒரு குருவும் வாசலாகக் கருதப்படுவார்.
அவர் சம்சாரம் என்ற கீழ்ப்பட்ட நிலைக்கும் மோட்சம் என்ற உயர்ந்த நிலைக்கும்
இடைப்பட்ட வாசலாகத் திகழ்கிறார்.
பாடல் 18
சாமநாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதிலும் சிவனைநீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே!
(பத)
இப்பாடலும் வேதம் சாத்திரம் ஆகியவற்றின்
உட்பொருள் புரியாமல் ஒதுபவரைக் குறித்தது.
வேதம் கர்ம காண்டம் ஞானகாண்டம் என்ற இரு பகுதிகளைக் கொண்டது. அதில் கர்மகாண்டம் உலகபயன்களை அளிக்கும்
மந்திரங்களை உடையது. ஒருவர் மக்கட்பேறு
செல்வம்போன்ற அல்ப பயன்களுக்கு வேதத்தைப் பயன்படுத்துவதையே சிவவாக்கியர் காமநோய்
என்று குறிப்பிடுகிறார். அதனால் வேதத்தை
எளிய பலன்களுக்கு உபயோகப் படுத்தாமல் இறைவனை உணரப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு
செய்தால் இறையுணர்வு நம்முள் ஏற்பட்டு நாம் மௌனிகள் ஆவோம். இதையே சிவவாக்கியர்
இறைவன் மௌன காயமாக நம்முள் இருப்பான் என்று கூறுகிறார்.
பாடல் 19
சங்கிரண்டு தாரையொன்று சன்ன
பின்னல் ஆகையால்
மங்கிமாளு தேயுலகம் மானிடங்கள்
எத்தனை
சங்கிரண்டையும் தவிர்த்து தாரைஊத
வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு
கூடிவாழல் ஆகுமே!
(பத)
சங்கு என்பது இடை பிங்கலை என்ற இரு
நாடிகள். தாரை என்பது சுழுமுனை நாடி. இந்நாடிகளிளிருந்து பல்லாயிரக்கணக்கான நாடிகள்
உடல் முழுவதும் விரவியுள்ளன. ஒருவரது
பிராணன் சுழுமுனை நாடியில் செல்லாமல் இவ்விரண்டு நாடிகளில் சென்றால் மக்கள் உலக
வாழ்க்கையில் ஈடுபட்டு நாளடைவில் தேய்ந்து இறந்து போகின்றனர். அவ்வாறு மூச்சுக்காற்றை இடை பிங்கலை நாடிகளில்
செலுத்தாமல் சுழுமுனையில் செலுத்தினால் இறைவனுடன் சேரலாம். அந்த இறைவன் சக்தியோடுகூடிய சிவனாவான்.
பாடல் 20
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத
பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்தை
அறிந்துகூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன்
அம்பலத்தில் ஆடுமே!
(பத)
நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் ந என்பது பூமியையும் ம என்பது
நீரையும் சி என்பது நெருப்பையும் வா என்பது காற்றையும் ய என்பது ஆகாசத்தையும் குறிக்கும்.
உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் பஞ்சபூதங்களால் ஆனவை. அதனால் சிவவாக்கியர் உயிர்களை
அஞ்சிலே பிறந்தது அஞ்சிலே வளர்ந்தது என்கிறார்.
இந்த ஐந்தெழுத்தில் சி என்னும் எழுத்து சிவனைக் குறிக்கும். அந்த ஒரு எழுத்தை மட்டுமே ஒருவர் அதன் பொருளை
அறிந்து கூறினால் இறைவன் அவரது சித்தாகாசத்தில் வந்து நடனமாடுவான்.
No comments:
Post a Comment