Friday, 8 March 2013

53. இடக்கை சங்கு வலக்கை சூலம்...




Verse 53
இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கைசூல மான்மழு
எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே
 


இப்பாடலிலிருந்து சிவனும் விஷ்ணுவும் ஒரு தெய்வத்தின் வெவ்வேறு உருவங்களே என்று காட்டத் தொடங்குகிறார் சிவவாக்கியர்.  இவர்களில் யார் பெரியவர் என்ற சண்டை அவர் காலத்திலேயே இருந்தது போலும்! 
இந்து மதத்தில் ஒரு குறிப்பிட்ட குணத்தைக் குறிக்க ஒரு கடவுளை, ஒரு உருவத்தைப் படைத்தனர்.  கோபத்தை குறிக்க ஒரு தெய்வம், கருணையைக் குறிக்க ஒரு தெய்வம், படைப்பைக் குறிக்க ஒரு தெய்வம், காத்தலைக் குறிக்க ஒரு கடவுள் என்று செயல்களுக்கும் குணங்களுக்கும் வெவ்வேறு உருவங்களை நாம் கொடுத்துள்ளோம்.  நமது இந்த செயலின் மத்தியில் இவையனைத்தும் ஒரே இறைமையில் பல்வேறு உருவங்கள் என்பதை மறந்துவிட்டோம். அதனால்தான் பல சண்டைகள் ஏற்பட்டுள்ளன.
இருகண்கள் என்பது உயர்வு தாழ்வு, இன்பம் துன்பம் என்று இருதுருவங்களைக் குறிக்கும். குணங்கள் இருதுருவங்களாகப் பிரிவதே படைப்பிற்கு அடிப்படை.  அந்த கருத்திலேயே முன்னோர்கள் சக்தி, சிவம் (ஆண் பெண் என்ற துருவங்கள்) சிவன், விஷ்ணு (அழித்தல் காத்தல்) என்று தெய்வங்களைப் படைத்துள்ளனர். இதையே சிவவாக்கியர் இருதுருவங்களும் ஒரே உருவில் உள்ளன என்று இப்பாடலில் கூறுகிறார். அத்தகைய இறைவன் நமது உடலில் எளிதில் புரியாத விதத்தில் கலந்துள்ளான்.

No comments:

Post a Comment