Tuesday, 5 March 2013

பாடல்கள் 31, 32, 33, 34 and 35



பாடல் 31
பாட்டிலாத பரமனைப் பரலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே

(பத) பாட்டில்லாத பரமன் என்பது நாதாந்த நிலையைக் குறிக்கும். அவன் ஒரு பற்றும் அற்றவன் ஒன்றால் ஒரு இடத்தில் நாட்டப்படாதவன். எங்குமாய் பரந்திருப்பவன்.  அவன் உமையைத் தனது இடப்பாகத்தில் உள்ளவன். அதாவது சிவ சக்தி ஐக்கிய நிலை.  அவனைக் குறித்து புரிதலில்லாமல் மந்திரத்தை முணுமுணுப்பது வேட்டைக்காரர் பறவையை கூப்பிடும் குசுகுசு பேச்சாக முடியும்.

மந்திர ஜபம் உரக்க ஜெபிப்பது, குரலெழும்பாமல் முணுமுணுப்பது, மனத்தினுள் ஜெபிப்பது என்று மூன்று வகைப்படும். அவற்றுள் மனத்துள் ஜெபிப்பது மிக சக்தி வாய்ந்தது.

பாடல் 32
செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பது இல்லையே

(பத) தென்னை மரத்தின் வேரில் வார்த்த நீர் அதன் உயர்ந்த கிளையில் இளநீராவது போல இறைவன் சிவவாக்கியரின் உள்ளத்தில் குடிகொண்டானாம்.  இளநீர் எவ்வாறு தேங்காயினுள் புகுகிறது என்பது ஒருவருக்கும் தெரியாது.  இளநீருக்கு சுவையூட்டுவது அதனுள் இருக்கும் நீரே. அதேபோல் ஜீவனுக்கு மதிப்பைச் சேர்ப்பது அதனுள் இருக்கும் இறைவனே.  அவ்வாறு உள்ளிருக்கும் இறைவனை உணர்ந்தபின் உலக மக்களுடன் வெட்டிப்பேச்சோ இறைமையை விளக்க முயல்வதோ அனாவசியம் என்று சிவவாக்கியர் கூறுகிறார். 
இறைவனின் இருப்பை வார்த்தைகளால் விளக்க இயலாது. அதை ஒருவர் அனுபவத்தினால் தான் உணர வேண்டும்.  அதனால் சிவவாக்கியர் தான் வையத்து மக்கள் முன் வாய் திறப்பது இல்லை என்று கூறுகிறார்.

பாடல் 33
மாறுபட்ட மணிதுலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே

(பத) வண்டின் எச்சில் என்பது தேன்.  ஊறுபட்ட கல் என்பது இறைவனின் சிலை. கல்லால் செய்த இறைவனின் சிலைக்கு தேன், பால் முதலியவற்றால் அபிஷேகம் செய்து மணியடித்து, தூப, தீபம் காட்டி பூஜை செய்யும் மாந்தரை மூடர்கள் என்கிறார் சிவவாக்கியர் ஏனெனில் தேவர் கற்சிலை அல்ல.  அதனின்று வேறுபட்டவர்.  அவ்வேறுபாட்டை உணர்ந்தவர் சிவவாக்கியர்.
அது எவ்வாறு ஏற்பட்டது என்றால் இறைவன் அவரை ஒரு குருவின் பாதத்தில் வைத்து பொருட்களைக் கூறுபட்டு நோக்கக் கூடிய திறத்தை அவருக்கு வழங்கியதால்.

பாடல் 34
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே!

(பத) இறைவன் கற்சிலையல்ல என்று கூறிய சிவவாக்கியர் இப்பாடலில் கோயில் என்பது என்ன, குளங்கள் என்பது என்ன என்று விளக்குகிறார்.  கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட கோயிலும் குளங்களும் உண்மையில் அவையல்ல.  கோயில் என்பது நமது உடல் ஏனெனில் அதில் இறைவன் குடியிருக்கிறான்.  குளங்கள் என்பது நம்முள் இருக்கும் நீராலான வஸ்துக்கள். மண்ணாலும் கல்லாலும் ஆன கோயிலும் குளங்களும் அழியக்கூடியவை, நம்முள் இருக்கும் கோயிலும் குளங்களும் அழிவற்றவை. 

பாடல் 35
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவனிருப்பன் என்கிறீர்
உம்பதம் நிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல்பாடல் ஆகுமே!

(பத) கல்லிலும் மண்ணிலும் கடவுள் இல்லை என்றால் அவர் உலோகத்தில் இருப்பாரோ என்ற சந்தேகத்திற்கு இப்பாடலில் பதிலளிக்கிறார்.  இறைவன் வெளியில் இல்லை; நம்முள் இருக்கிறார்.  அதை உணர்ந்தால் எங்கும் பரவியுள்ள இறையுணர்வு நம்முள் வந்தாடும். 

No comments:

Post a Comment