பாடல்
46
சாதியாவதேதடா சலம் திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே?
(பத)
உலகில் பிறப்பென்பது என்ன? நீர் வஸ்து
ஓட்டத்தைப் பெற்று பெண்ணை அடைந்து ஒரு உருவை எடுப்பதுதானே! அது அலைகளைப் போல தோன்றி மறைவான தானே!
இவ்வுலகில் அம்பூதங்கள் அவற்றை உணரும் புலன்கள் ஆகியவை அனைத்தும் விழிப்புணர்வு
என்ற ஒரே பொருளினால் ஆனவை தானே! இது
எவ்வாறு இருக்கிறது என்றால் பொன்னைக் கொண்டு வாளி, காரை, கம்பி, பாடகம் என்று
பல்வேறு காதில் அணியும் அணிகலன்களைச் செய்தாலும் அவற்றின் அடித்தளமாக இருக்கும்
பொன் ஒன்றுதானே. அதேபோல் மக்கள் ஒருவருக்கொருவர் தோற்றத்திலும் குணங்களிலும்
வேறுபட்டாலும் அவர்களது அடித்தளமான இறைமை, விழிப்புணர்வு ஒன்றுதானே.
இது இவ்வாறிருக்க மக்களுள் சாதிபேதங்களைப் பேசுவது எவ்வாறு
சரியாகும் என்று சிவவாக்கியர் கேட்கிறார்.
பாடல் 47
கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே
(பத)
இப்பாடலைப் படித்தவர்கள் சிவவாக்கியர் மறுபிறவி இல்லை என்று கூறுகிறார் என்று எண்ணலாம். அதுவல்ல இப்பாடலின் நோக்கம். கறந்த பால் என்பது மாட்டின் மடியில் இருக்கும்
பாலுக்கு அடுத்த நிலை. வெண்ணெய் என்பது
கடையப்படாத மோருக்குப் பிற்பட்ட நிலை. இவ்வாறே சங்கின் ஓசை, பூக்கள் மலருவது, பழங்கள் மரத்திலிருந்து
உதிருவது ஆகியவை பிற்பட்ட நிலையைக் காட்டுகின்றன. அதேபோல் ஞானம் பெற்றிருப்பது
என்பது அதன் இல்லாமை என்ற நிலைக்குப் பிற்பட்டது. அவ்வாறு ஞானம் பெற்றிருப்பவர்கள்
முற்பட்ட நிலைக்குப் போவதில்லை. அதாவது, அவர்கள் மீண்டும் சம்சாரத்தில்
உழலுவதில்லை
என்று
சிவவாக்கியர் கூறுகிறார்.
பாடல்
48
அறையினில் கிடந்தபோது அன்று
தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர்குளித்த
அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர்பிறந்த அன்று
தூமை என்கிறீர்
புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே?
(பத)
தூமை
என்ற சொல் மாதவிடாய் என்றும் தூய்மை என்றும் இரு பொருள்படும். இப்பாடலில்
மாதவிடாய் அல்லது தீட்டு என்ற பொருளில்
சிவவாக்கியர்
இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
மாதவிடாய் காலங்களில் பெண்களை அறையில் தனியாக அமரச்செய்து அவர்கஅவர்களைத்
தீட்டு என்று ஒதுக்குகின்றனர். அந்த
நாட்கள் முடிந்தபின் அவர்கள் குளித்த அன்று அவர்கள் தூய்மை பெற்றுவிட்டனர் என்று
கூறுகின்றனர். ஒருவர் பிறந்த அன்று ஊர் முழுவது
பறையறைந்து அப்பிறப்பை அறிவித்தும் அன்றும் தீட்டு என்று ஒருவரையும் அணுக
விடுவதில்லை. இது இவ்வாறிருக்கு உண்மையில்
தூய்மையின் உருவமான இறைவனோடு பொருந்துவது எவ்வாறு என்று சிவவாக்கியர் கேட்கிறார்.
மக்கள்
கூறும் தீட்டும் தூய்மையும் உடல் சார்ந்தவையே. அவை ஆன்மாவுக்கு அல்ல. அதனால்
ஒருவர் தனது நேரத்தை இத்தகைய வேறுபாடுகளைப் பாராட்டுவதற்குச் செலவிடுவதை விட்டு
இறைவனை அடைய முயலவேண்டும்.
இப்பாடலின்
முதல் மூன்று வரிகள் ஒருவர் கருவறையில் இருக்கும் நாட்களையும், நீர்க்குடம்
உடைந்து அவர் வெளிவரும் நாளையும் முடிவில் நீரினால் குளிப்பாட்டப்பட்டு
சுடுகாட்டுக்குச் செல்வதையும் குறிப்பதாகவும் கொள்ளலாம். இம்மூன்று நிகழ்வுகளும் தீட்டாகக்
கருதப்படுகின்றன.
பாடல் 49
தூமை தூமை என்றுளே
துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமைபோனது
எவ்விடம்
ஆமைபோல மூழ்கிவந்து அநேக
வேதம் ஓதுறீர்
தூமை திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே
(பத)
தீட்டு மடி என்று அநேக சாத்திரங்களைப் பேசித் துவளும் மக்களிடம் சிவவாக்கியர்
தூய்மையான மாது, வாலை உள்ளே இருக்கும்போது தீட்டு எவ்வாறு உள்ளே வர முடியும் என்று
கேட்கிறார். மக்கள் வேதங்களையும்
சாத்திரங்களையும் நீரிலிருக்கும் ஆமைபோல நீரில் முழுகி வந்து ஓதுகின்றனர். ஆனால் அவ்வேதங்கள், ஞானத்தைக் கொடுக்கும்
சொற்கள், அனைத்தும் தூமையின் திரட்சியே என்று அவர்கள் அறிவதில்லை. தூமையே திரண்டு குருவாக வந்து அவ்வேதத்தைக்
கற்றுத்தருகிறார்.
Verse
50
சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆவதும்
மெய்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே.
(பத)
ஞானத்தைத் தரும் வேத சாத்திரங்கள், இறைவனின் ஜோதி உரு, ஞானத்தைத் தரும் குருக்கள்,
பூஜை, நமது கிரியைகள் இவையனைத்தும் தூமையே.
பரிசுத்தமே ஒரு உருவெடுத்து இவையனத்துமானது.
இப்பாடலில்
தூமை என்பது பரிசுத்தம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment