Monday, 4 March 2013

பாடல்கள் 26,27,28,29,30



பாடல் 26
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை?
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?
மிண்டனாய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை?
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை?

(பத) இறைவன் எத்தகையவன் என்பதை அறியாமலேயே மக்கள் பலவேறு பூஜைகளில் ஈடுபடுகின்றனர். பல்லாயிரக்கணக்கான மலர்களைப் பறித்து சிலைகளின் மீது சாத்துகின்றனர், பல மந்திரங்களை ஓதுகின்றனர்; சந்தியாவந்தனம் என்ற பெயரில் நீரை வாரி இறைக்கின்றனர்; பல கோயில்களையும் பிரதட்சணம் செய்கின்றனர்.  இவற்றால் யாதொரு பயனுமில்லை.

பாடல் 27
அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகள்
பண்டறிந்த பான்மைதன்னை யார் அறிய வல்லரே?
விண்டவேத பொருளை அன்றி வேறுகூற வகையிலா
கண்டகோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே!

(பத) தேவதேவனான இறைவனின் இருப்பிடத்தை அறிந்த ஞானிகள் எவ்வாறு அதை அறிந்தனர்? வேதம் விளக்கிய வழியன்றி அவனைக் காண வேறு வழியில்லை என்று சிவவாக்கியர் பதிலளிக்கின்றார். வேதத்தின் முடிவான வேதாந்தமே இறைவனைக் காண சரியான வழிகாட்டி. இந்த உண்மையை அறிந்தோர் இறைவனை அறிவதற்கு நேரத்தைச் செலவழிப்பதை விட்டு கண்ட கோயில், தெய்வம் என்று கும்பிட்டுத் திரிவதில்லை. 
இறைவன் நமது புலன்களுக்கு அப்பாற்பட்டவன்.  அவனைக் காண நமது கண்கள் பயனற்றவை.  அவன் வேதத்தின் உட்பொருள். அவனை மனத்தால் மட்டுமே உணர முடியும். அதனால் இறைவனைத் தேடும் ஒருவர் கண்ணால் காணக்கூடிய தெய்வத்தின் சிலை, கோயில் என்று வழிபட்டு தனது நேரத்தை வீணாக்குவதில்லை.

பாடல் 28
தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணும் எங்குமாய் பரந்தஇப் பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே!

(பத) இறைவன் சிவலோகத்தில் இருக்கிறான், பரமபதத்தில் இருக்கிறான், நம்மைவிட்டு வெகுதூரத்தில் இருக்கிறான் என்று சிலர் கூறுவார்.  அத்தகையோர் இறைவனைக் காண முயலாத சோம்பேறிகள்.  இவ்வுலகமாகவும் வெளியாகவும் பரந்து நிற்கும் இறைவன் நம் உள்ளத்தினுள் நமக்கு மிக அருகில் உள்ளான். அவனை நேரடியாக நமக்குள் உணரலாம்.

பாடல் 29
தங்கம்ஒன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தும்முளே
விங்களங்கள் பேசுவீர் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே!

(பத) இறைவன் யார் என்பதை அறியாத பலர் அவன் சிவன், அவன் விஷ்ணு என்று சண்டை போடுகின்றனர்.  தோடு, வளையல், சங்கிலி என்று ஆபரணங்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அவற்றின் மூலப்பொருளான தங்கம் ஒன்றல்லவா?  அதைப் போல இறைவனுக்குப் பல்வேறு உருவங்களும் பெயர்களும் இருந்தாலும் நம்முள் இருக்கும் அவன் ஒருவனே.

பாடல் 30
நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்யம் கேளுமின்
நெருப்பும் நீரும் உம்முளே நினைந்துகூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்துகூடல் ஆகுமே!

(பத) மக்கள் பெரும் பொருட்செலவில் ஹோமங்களும் யாகங்களும் செய்கின்றனர்.  நீரில் குளித்துத் தம்மைத் தூய்மைப் படுத்திக்கொண்டதாகக் கருதி நெருப்பில் நெய்யை வார்த்து வேத மந்திரங்களைக் கூறுகின்றனர்.  ஆனால் அவ்வேத வாக்கியங்கள் என்ன கூறுகின்றன என்பதை அவர்கள் கவனிப்பதில்லை.  வேதங்கள் அந்தர்யாகம் எனப்படும் நம்முள் செய்யும் யாகத்தையே வெகுவாகப் புகழுகின்றன. நெருப்பு என்பது நம்முள் இருக்கும் குண்டலினி அக்னி; நீர் என்பது நம்முள் இருக்கும் ரத்தம், சுக்கிலம், சுரோணிதம் போன்ற நீர்த்தன்மையையுடைய பொருட்கள். ஹோம குண்டம் நம் உடல் வழிபடப்படும் தெய்வம் நம்முள் இருக்கும் இறைமை.  இதை ஒருவர் அறிந்தால் ஞான சங்கோசம் எனப்படும் அறிவின் சுருக்கமற்ற இறைவனுடன் நிரந்தரமாக கூடி இருக்கலாம்.

No comments:

Post a Comment