Saturday 2 March 2013

1. காப்பு



அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தை உன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷதோஷ பாவமாயை தூர தூர ஓடவே
கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே

(பதவுரை): 

ஒரு செயலைத் தொடங்கும்முன் அச்செயல் நன்றாக நடக்க வேண்டும், அதற்கு எவ்வித தடையும் ஏற்படக்கூடாது என்று இறைவனை வணங்குவது வழக்கம்.  இவ்வழக்கத்தையொட்டி சிவவாக்கியம் என்ற நூலை இயற்றப்புகும் சிவவாக்கியர் இக்காப்புச் செய்யுளைப் பாடியுள்ளார்.  . கலைகளுக்கும் ஞானத்திற்கும் அதிபதியான கணபதியைப் போற்றும் அவர், தனது நூலில் தான் கூறப்போகும் செய்தியையும் முன்னுரையாக அளிக்கிறார். இச்செய்யுளின் இறுதியில் தனது அடக்கத்தைக் காட்டும்விதமாக பேயனாகிய தான் இயற்றும் இந்நூலில் ஏதேனும் பிழையிருப்பின் அனைவரும் பொறுக்கவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார்.

நமச்சிவாயம் என்பது ஒரு அரிய மந்திரம்; அது அனைத்திற்கும் முதலும் முடிவுமாக இருப்பது; முப்பதுமுக்கோடி தேவர்களும் அதனை ஜெபித்துள்ளனர் என்று கூறும் சிவவாக்கியர், தான் தனது நூலை வளைந்த எழுத்தான ஓம் என்பதை மனத்தில் தியானித்து இயற்றுவதாகக் கூறுகிறார். இதன் மூலம் நமசிவாயமும் ஓம் என்னும் பிரணவமும் வேறல்ல என்று காட்டுகிறார். 

யானை முகத்தோனான கணபதி, குண்டலினி யோகத்திலும் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறார்.  ஆறு சக்கரங்களில் முதலாவதான மூலாதார சக்கரத்தின் அதிபதி கணபதியாவார்.  ஓம் என்னும் பிரணவம் மூலாதர சக்கரத்திலிருக்கும் குண்டலினி சக்தியைக் குறிக்கும். அதனால் கணபதியின் வழிபாடு குண்டலினி சக்தியின் வழிபாடாகும்.  குண்டலினி யோகத்தைத் தனது நூலில் விளக்கும் சிவவாக்கியர் அதற்கு முன்னோடியாக கணபதியை இச்செய்யுளினால் போற்றுகிறார். 

சித்தர்கள் தம்மைப் பேயன் என்று கூறுவதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறது.  ஒரு பேய்க்கு உடல், பொருள் என்று எதுவித சொத்தும் இல்லை.  சித்தர்களும் அவ்வாறே எவ்வித பொருள் பற்றும் இல்லாமல் இருப்பவர்கள்.

இப்பாடலில் குறிப்பிடப்படும் தேவர்கள் எவ்வித மதத்தையும் சார்ந்த தெய்வங்களல்ல. அவர்கள் குண்டலினி யோகப்பயிற்சியினால் ஏற்படும் பல விழிப்புணர்வு நிலைகளைக் குறிப்பவர்களாவர். 

தேவர்கள் தமது தோஷங்கள் போவதற்கு நமசிவாயம் என்று ஜெபிப்பதாக சிவவாக்கியர் கூறுகின்றார்.  தோஷங்கள் ஒருவரது செயல்களால் ஏற்படுபவை, ஒருவர் அறியாமலேயே ஏற்படுபவை என்று இருவகைப்படும். நமசிவாய மந்திரம் இவ்விருவித தோஷங்களையும் விலக்கும்.

4 comments:

  1. ENAKKU INTHA KAPPU MIKKA PAYANLIKKIRATHU KARANAM ENATHU THAAYIN PEYAR KARPAGAM

    ReplyDelete
  2. YENAKKU INTHA SIVAVAAKIYARIN KAPPU SEYUL MIHAVUM PAYANALIKKINDRATHU KARANAM YENATHU THAYIN PEYAR KARPAGAM

    ReplyDelete
  3. உங்களது கமெண்டுக்கு நன்றி ஐயா. சிவவாக்கியர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித இன்பத்தை, மகிழ்ச்சியை அளிக்கிறார்!

    ReplyDelete