Sunday 3 March 2013

பாடல்கள் 6,7,8,9 10.



பாடல் 6
ஞான நிலை

என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர்காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே

(பத): இறைமை அல்லது தெய்வீகம் நம்முள் இருக்கின்றது. ஆனால் நாம் ஒருவரும் அதன் இருப்பை அறிவதில்லை.  நமது கவனமனைத்தும் புறப்பொருட்களிலேயே தங்கிவிடுகின்றன.  இதையே சிவவாக்கியர் முதல்வரியில் குறிப்பிடுகின்றார். அத்தகைய இறைமையை எவ்வாறு அறிவது?  தியானத்தினால் புற உலகைவிட்டு நம்முள் ஆழப் புகுந்து, உன்னி, அதனை அறியவேண்டும். 

பொதுவாக ஒரு பொருளைப் பார்க்கும்போது காண்பவர், காட்சிப்பொருள், காணுதல் என்ற மூன்று வஸ்துக்கள் இருக்கின்றன.  இறைமையைக் காண விழையும்போது முதலில் காண முயல்பவர், இறைமை, காணுதல் என்ற மூன்று வஸ்துக்கள் உள்ளன.  இறைமையை உணர்ந்தபின் காண்பவரே காட்சிப்பொருளாக, இறைமையாக மாறிவிடுகிறார். இந்நிலையில் காண்பவர், காட்சிப்பொருள் என்ற வெவ்வேறு வஸ்துக்கள் மறைந்து ஒருமையே நிலவுகிறது.  அதனால், இப்பொழுது காண்பதற்கு யார் இருக்கிறார்கள்?  ஒருவரும் இல்லை. ஒரு பொருளாகவே மாறிய ஒரு வஸ்துவால் தன்னைத் தானே காண்பது இயலாதல்லவா? இதையே சிவவாக்கியர் அத்தகைய சக்தியைப் பெற்றவர் யாரேனும் உள்ளனரா என்று மூன்றாவது வரியில் கேட்கிறார்.

பாடல் 7
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே!

(பத):
ஒன்றை நினைக்கக் கூடிய சக்தி, சித் எனப்படும் அறிவைப் பெற்ற ஒரு வஸ்துவால், சேதனத்தால்தான் இயலும். இப்பாடலின் முதல் வரியில் அத்தகையை நினைத்தல் என்ற செயலைச் செய்வது தன்னுள் இருக்கும் இறைமை என்னும் விழிப்புணர்வே என்று சிவவாக்கியர் கூறுகிறார். மாயை என்பது இறைமையின் அற்புத சக்தி.  மாயையே இவ்வுலகிற்கு இருப்பைத் தருகின்றது.  அத்தகையை மாயையே கர்மத்துக்கு ஏற்றவாறு ஒரு ஜீவனை ஒன்றை நினைக்கவோ மறக்கவோ செய்கின்றது. ஆனால் சிவவாக்கியரின் நினைக்கும் வஸ்து ஜீவனாக இல்லாமல் இறைவனாக இருப்பதால் இவ்வாறு அவரை நினைக்கக் செய்யும் மாயையும் உண்மையில் இறைமையே. அதனால் அவர் அத்தகைய மாயை உண்மையில் மாயையோ என்று கேட்கிறார். இறைமையே அகண்டமாய், அனைத்துமாய் எல்லாவற்றிற்கும் முற்பட்டதாய் அவருள் இருந்து கொண்டே அவரைத் தன்னுள் இருத்திக்கொள்வதாய் இருப்பதே அற்புதம் மாயையல்ல என்று அவர் கூறுகிறார்.

பாடல் 8
மண்ணும் நீ விண்ணும்நீ  மறிகடல்கள் ஏழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ
நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.

(பத): இறைமையே புலன்களால் அனுபவிக்கப்படும் அனைத்தும் என்று சிவவாக்கியர் கூறுகிறார். அதுமட்டுமல்ல காணும் கண்ணும் அதனால் காணப்படும் பொருட்களும் காண்பவரும் இறைமையே.  அத்தகைய இறைமையின் திருப்பாதங்களைத் தான் சேருமாறு அருள் புரிய வேண்டும் என்று அவர் வேண்டுகிறார்.

ஏழு கடல்களாவன: கரா, க்ஷரா, சுரா, க்ருத, ருச, தஹி. ஜல எனப்படும்

பாடல் 9

அரியுமல்ல அயனுமல்ல அப்புறத்தில்அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்து நின்ற தூரதூர தூரமே


(பத):
இறைமை என்பது ஒரு உருவைக் கொண்ட பொருட்கள் மட்டுமல்ல. அருவமும் இறைமையேயாகும்.  இப்பாடலில் பிரம்மாவும் விஷ்ணுவும் உருவமுள்ளவற்றைக் குறிகின்றனர். வெண்மை, கருமை, செம்மை என்ற மூன்றும் இறைவனின் அருவ நிலையைக் குறிக்கின்றன. வெண்மை என்னும் நிறம் சத்துவத்தையும் செம்மை ரஜோ குணத்தையும் கருமை தமோ குணத்தையும் குறிக்கும்.  இம்மூன்று குணங்களே உலகிலுள்ள எல்லா பொருட்களும் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பவை.  இறைமை இம்மூன்று குணங்கள் மட்டுமல்லாமல் இவற்றை ஆட்சி செய்யும் முழுமுதற் காரணப்பொருளும் ஆகும்.
அது பெரியதைவிட பெரியது சிறியதைவிட சிறியது. பிரம்மம் என்பதை விளக்க உபநிஷத்துக்கள் ’அணோரணீயான் மஹதோ மஹீயான்’ அதாவது மிகக்சிறிய அணுவைவிட சிறியது, மிகப்பெரியதைவிட பெரியது என்று கூறுகின்றன.  இக்கருத்தையே இப்பாடலின் மூன்றாம் அடி குறிக்கின்றது.  அது எல்லா உணர்வுநிலைகளையும் கடந்தது.  பொதுவாக ஜாக்ரத், சுவப்னம், சுஷுப்தி, துரியா என்று விழிப்புநிலைகள் நான்காகக் கூறப்படுகின்றன.  இறைமை இந்த நான்கு நிலைகளையும் கடந்த துரியாதீத நிலையாகும்.  அதுவே பரந்த வெளியாகும்.

பாடல் 10
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கும் மந்திரம்
எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே

(பத): 
இப்பாடல் ராமநாமத்தின் பெருமையை விளக்குகிறது. சந்தியா வந்தனம், புனித தீர்த்தமாடல் ஜபதபங்கள், தியானம், புனிதநூல்களைப் படித்து அறிவுபெறுவது ஆகிய அனைத்து செயல்களும் ராமநாம ஜபங்களாகும்.
ராமநாமம் என்பது ராமாயணத்திலுள்ள தசரதகுமாரனின் திருப்பெயர் மட்டுமல்ல. ரா என்பது அக்னி பீஜமாகும். ம என்பது அமிர்த பீஜமாகும்.  அக்னி பீஜம் பாபங்களை அழிக்கும்; அமிர்தபீஜம் இறப்பின்மையைக் கொடுக்கும்.  ராம என்னும் சொல் சமஸ்கிருதத்தில் மனத்திற்கு இன்பமளிப்பவன் என்று பொருள்படும். அது ஒரு குறிப்பிட்ட நபரை மட்டுமல்லாமல் பேரின்ப நிலையையும் குறிக்கும். தன்னில் மூழ்கி ஆத்மானுபவத்தில் திளைக்கும் யோகிகள் ஸ்வாத்மராமர் என்று அழைக்கப்படுவர். 

No comments:

Post a Comment