Monday 4 March 2013

பாடல்கள் 21, 22, 23, 24 and 25



பாடல் 21
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியான தஞ்சுமே
பிஞ்சுபிஞ்ச தல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சில் அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லிரேல்
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியான தொன்றுமே

(பத)
     இப்பாடலில் சிவவாக்கியர் நான்கு ஐந்துகள் காலத்தைக் கடந்தவை என்று கூறுகின்றார்.  அவை:
(௧) ஐம்பூதங்கள், (௨) அவற்றின் தன்மாத்திரங்கள் எனப்படும் குணங்கள் ஐந்து, (௩) கலை, காலம், ராகம், நியதி, வித்யா, என்ற ஐந்து கஞ்சுகங்கள், (௪) பரமசிவன், சிவன், சக்தி, சதாசிவன், ஈசுவரன், சத்வித்யா எனப்படும் ஐந்து இறைநிலைகள், (௫)கர்மேந்த்ரியம், (௬) ஞாநேந்த்ரியம் எனப்படும் இரு ஐந்து புலன்கள் என்பவை.
     இந்த வஸ்துக்களை ஒருவர் ஐந்து பிராணன்களான பிராணன் அபானன் உதானன், வியானன், சமானன் என்பவற்றை நெஞ்சிலே நிறுத்தி பஞ்சாட்சார மந்திரத்தைக் கொண்டு அறிய வேண்டும். அவ்வாறு அறிந்தால் ஐந்தேழுத்தான நமசிவாயவும் ஓம்நமச்சிவாய என்ற ஆறேழுத்தும் இல்லாமல் போய் அனாதியான நாதாந்த நிலையான ஆதி மட்டுமே இருக்கும்.

பாடல் 22
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேண்டும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்தபோது கையகன்று நிற்பிரே.
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே

(பத)
     தாம் என்றும் நிரந்தரமாக இருக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் மக்கள் செல்வத்தைச் சேர்த்து பெரும் வீட்டைக் கட்டி காலனை வெளிநிறுத்துவதைப் போல கதவை சாத்துகிறார்கள்.  ஆனால் காலன் உண்மையில் வரும்போது கையை விரித்து நிற்பதைத் தவிர அம்மக்களால் ஒன்றும் செய்ய முடியாது. இதை சிவவாக்கியர் ஆலமுண்ட கண்டனான திருநீலகண்டரின் பாதத்தின் மீதும் அம்மையான குண்டலினி சக்தியின் பாதத்தின் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறார்.  திருநீலகண்டர் மார்க்கண்டேயனை அழைக்க காலன் வந்தபோது அவனைத் தடுத்து மார்க்கண்டேயனைக் காத்தவர்.

பாடல் 23
ஓடம்உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம்உள்ள போதலோ உறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடம் உடைந்தபோதிலே ஒப்பிலாத வெளியிலே
ஆடும்இல்லை கோலும்இல்லை யாரும்இல்லை ஆனதே!

(பத)
     ஓடம் என்பது நம் உடலாகும்.  இந்நிலையில் ஜீவன் வேறு உடல் வேறு என்று இருக்கிறது. உடல் இருக்கும்போது இவ்வுலகில் உலாவுகிறோம். நமது உடல் நமது பேச்சைக் கேட்கும் என்று உறுதிபடுத்திக் கொள்கிறோம்.  அத்தகைய உடலை யோகத்தின் மூலம் எல்லையற்றதாக மாற்றும்போது, ஓடத்தை உடைக்கும்போது ஆண்டான் அடிமை, ஜீவன் உடல் என்ற வேறுபாடு இல்லை.  ஆடு என்னும் அடிமையும் இல்லை கோலான ஆண்டானும் இல்லை. 
பாடல் 24
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர் கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே!

(பத) தமது உடலைப் பேணுவதற்கு மக்கள் பல வேள்விகளைச் செய்து ப\சமயத்திற்குத் தகுந்தவாறு உண்மையையும் பொய்யையும் பேசி வீடு, மக்கள், செல்வம் என்று பல பொருட்களை ஈட்டி வாழ்கின்றனர்.  ஆனால் காலனின் தூதுவர்கள் கையில் சீட்டுடன் வந்து அழைக்கும்போது அந்த ஒலையின் விலையைக் கூடப் பெறாது இவ்வுடல் என்று சிவவாக்கியர் கூறுகிறார்.

பாடல் 25
அண்ணலே அநாதியே அநாதிமுன் அநாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெல்லாம்
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருதிஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?

(பத)  பிறவி என்பது உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது.  பிறப்பதற்கு முன் உயிர்கள் அனைத்துள்ளும் ஒரு வேறுபாடும் இல்லை. ஆண்,பெண் மனிதன் விலங்கு என்ற பாகுபாடுகள் எதுவும் இருப்பது இல்லை.  அனைத்து உயிர்களும் சுக்கிலத்தின் எழுச்சியே ஆகும்.  குருடான அச்சுக்கிலமும் தான் எங்கே செல்கிறோம் என்பதை அறியாமலேயே ஒரு முட்டையை அடைந்து உயிரை உருவாக்குகின்றது.

       அதி நுட்பமான தற்காலத்திய அறிவியல் உபகரணங்களால் கண்டுபிடிக்கப்பட்ட சூலுருதல் என்ற அறிவியல் சார்ந்த முறையை சித்தர்கள் அக்காலத்திலேயே அறிந்திருந்தனர் என்பதை இப்பாடல் காட்டுகிறது. 

No comments:

Post a Comment