Sunday 3 March 2013

பாடல்கள் 11,12, 13, 14, 15



பாடல் 11
கதாவுபஞ்ச பாதகங்களைத் துறந்த மந்திரம்
இதாம் இதாம் அதல்ல என்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம் இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே!

(பத): 
கொலை, களவு, பிறன்மனை விழைதல், குரு நிந்தனை, பொய் பேசுதல் ஆகிய ஐந்தும் பஞ்சமாபாதகங்கள் எனப்படும்.  ராம நாமம் இப்பஞ்சமகா பாபங்களையும் விலக்கும்.  இதை அறியாத மக்கள் பாபங்களை விலக்குவது இந்த மந்திரம், இல்லை, இந்த மந்திரம் என்று தம்முள் சண்டையிட்டுக்கொள்கின்றனர்.  ராம நாமமே ஒருவர் எப்பொழுதும் விடாமல் ஓதவேண்டிய மந்திரம்.  இம்மந்திரம் ஒருவருக்கு எல்லா நன்மைகளையும் கொடுக்கும்.

ராம என்னும் சொல் ஹர+உமா என்ற இரு சொற்களிலிருந்தும் பிறந்தது என்று சிலர் கூறுவர்.  ஹர என்பது சிவனையும் உமா என்பது சக்தியையும் குறிக்கும். 

பாடல் 12
நானதேது? நீயதேது நடுவில் நின்றது ஏதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராம என்ற நாமமே

(பத)
ராம நாமத்தை புகழும் இப்பாடல் முதலில் நாம் யார், அரசர், குரு என்று குறிப்பிடப்படுபவர்கள் யார், உலகில் படைத்து அழிக்கப்படுபவை யாவை, வெட்டவெளி என்பது ஏது இவையனைத்தையும் படைத்தது ஏது என்று கேட்டு இவையனைத்தும் ராம நாமமே என்று கூறுகின்றது. 

பாடல் 13
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டாரே!
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ
மாத்திரைப்போதும் உளே யறிந்துதொக்க வல்லீரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!

(பத)
     சரியான புரிதல் இல்லாமல் வேதங்களை ஓதுபவரை இப்பாடலில் சிவவாக்கியர் சாடுகிறார்.  சட்டநாத பட்டரே! என்று அவர்களை அழைக்கும் சிவவாக்கியர், இறப்பு நெருங்கும்போது, உடல் வேர்த்து, மூச்சிரைப்பு வரும்போது, அவர்கள் ஓதும் வேதம் வந்து உதவுமா என்று கேட்கிறார்.  அவ்வாறு பொழுதை வரட்டு சடங்குகளில் வீணாக்காமல் ஒரு மாத்திரைப் பொழுதாவது மனத்துள் இறைவனை எண்ணினால் இறப்பு முதலான நோய்கள் நெருக்கா, சித்தியும் முக்தியும் கிடைக்கும் என்று அவர் கூறுகிறார். 

மாத்திரை என்பது கண் அசைக்கும் நேரம் அல்லது கைசொடுக்கும் நேரம் எனப்படும்.  அது ஒரு மருந்து அளவையும் குறிக்கும்.  இறைவனை ஒரு மாத்திரைப் பொழுது நினைக்கவேண்டும் என்பதற்கு ஒரு குறுகிய காலப்பொழுது அவரை நினைக்கவேண்டும் அல்லது மாத்திரை தேவைப்படும்பொழுது நினைக்கவேண்டும் என்றும் பொருள் கூறலாம்.

     அகத்தியர் ஞானம் என்னும் நூலில் “சித்தர் என்பவர் சாத்திரத்தை எரித்தவர்” என்று கூறப்படுகிறது. இதனால் சித்தர்கள் சாத்திரங்களுக்கு விரோதிகள் என்று பொருளில்லை.  சித்தர் என்பவர் சாத்திரங்களைக் கடந்தவர். சாத்திரங்கள் கடவுளைக் காட்டும் வழிகாட்டிகளே.  அவையே இறைவனில்லை. சித்தர்கள் சாத்திரங்கள் கூறும் இறைவனை நேரில் உணர்ந்தவர்கள்.

பாடல் 14
நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்
பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
ஆலம் உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே

(பத)
இறைவனை உணருவதற்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு பாதங்களைக் கொண்ட வழி உள்ளது.  இவற்றில் சரியை என்பது, தன்னையும் தனது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் புறவொழுக்கமாகும்.  கிரியை என்பது பொய் பேசாமை, களவாமை போன்ற அகவொழுக்கமாகும்.  யோகம் என்பது ஆசனம், பிராணாயாமம் முதலியவை.  ஞானம் என்பது இறைநிலையைப் பற்றிய அறிவாகும்.  சாத்திரங்கள் ஞானத்தை அளிப்பவை.  ஆனால் அவற்றின் பொருளைச் சரியாக புரிந்துகொள்ளாவிட்டால் ஒரு பயனுமில்லை.

இறைவன் பாலினுள் நெய்யைப் போல கலந்திருப்பதாக சிவவாக்கியர் கூறுகிறார்.  இறைவன், சாத்திரத்தினுள்ளும் உடலினுள்ளும் நெய்யைப் போல மறைந்திருக்கிறான்.  பாலைக் கடைந்து நெய்யை வெளிப்படுத்துவதைப் போல சாத்திரங்களைப் படித்து, உணர்ந்து, அவற்றில் ஊன்றி நின்று உட்பொருளான இறைவனை வெளிப்படச் செய்ய வேண்டும்.  குண்டலினி யோகத்தினால் ஜீவனுள் இருக்கும் அவனை வெளிக் கொணரவேண்டும். அவ்வாறு செய்யதால் இறப்பே இறந்து போகும். இறைவன் உள்ளிருக்கும்போது காலன் கனவிலும் இருப்பதில்லை என்று சிவவாக்கியர் ஆலமுண்ட கண்டரின் திருப்பாதங்களின் மீது ஆணையிட்டுக் கூறுகிறார்.

இறைவனை ஆலமுண்ட கண்டன் என்று அழைப்பதில் ஒரு உட்பொருள் உள்ளது. திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாக இட்டுக் கடைந்தபோது ஆலகாலம் என்ற நச்சு வெளிப்பட்டது.  உலகமே கண்டு நடுங்கிய அதை சிவபெருமான் தான் உண்டு உயிர்களைக் காத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. திருப்பாற்கடல் என்பது ஜீவனின் விழிப்புணர்வு.  மந்தரமலை சுழுமுனை நாடி.  கடைவது என்பது குண்டலினி யோகம். அவ்வாறு கடைந்தால் இறையுணர்வுடன் பல சித்திகளும் ஏற்படும்.  அச்சித்திகளை தவறான வழியில் எளிய பலன்களுக்காக மேற்கொண்டால் அவை நச்சைபோல ஒருவரைக் கொன்றுவிடும்.  அதனால் அச்சித்திகளை இறைவனுக்கு அர்ப்பணித்துவிடவேண்டும். அவன் அதை ஏற்றுக்கொண்டு உயர்ந்த பலனான விடுதலையை அளிப்பான்.

சித்த சம்பிரதாயத்தில் விந்துவை அதன் கீழ்நோக்குப் பயணத்திலிருந்து மேல் நோக்கித் திருப்புவது மடைமாற்றல் எனப்படும்.  அவ்வாறு செய்யும் ஒருவர் தனது புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராகக் கருதப்படுவார். அவ்வாறு செய்யும்போது உலக வாழ்க்கையைக் கொடுக்கும் நஞ்சான விந்து, மோட்சத்தை அளிக்கும். இதைத்தான் சிவபெருமானின் நீலகண்டம் குறிக்கின்றது.  இத்தாத்பரியத்தை ஒருவரும் அறியவில்லையே என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் வருந்துகின்றார்.

பாடல் 15


வித்திலாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை
தச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்ஙனே?
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்!
சித்திலாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே
(பத)
     வித்திலாமல் எதுவும் முளைப்பதில்லை. அத்தகைய சம்பிரதாயம் இவ்வுலகிலுமில்லை மேலுலகிலும் இல்லை. ஒரு தச்சர் இல்லாமல் ஒரு மாளிகையைக் கட்டமுடியுமா? இதையறியாத மக்களில் சிலர், லோகாயதம் சார்வாக்கம் ஆகிய மதக்களைச் சேர்ந்த நாத்திகர்கள், இறைவன் என்று ஒருவன் இல்லை. உயிர்கள் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஏற்பட்டன என்று கூறுகின்றனர். விழிப்புணர்வுள்ள சித்தாகிய இறைவன் இல்லாமல் விழிப்பு உணர்வு அற்ற பஞ்ச பூதங்களிளிருந்து விழிப்புணர்வுள்ள ஜீவன் ஏற்பட்டது என்று கூறுகின்றனர். தமது தாயான இறைவன் இருக்கும்போது அதை விடுத்து அச்சக்தியிலிருந்து தோன்றிய பஞ்ச பூதங்களைக் காரணப் பொருட்களாகக் கூறுவது பெற்ற தாயை விற்று விட்டு வேறு ஒருபெண்ணை அடிமையாகக் கொள்வதைப் போல உள்ளது என்று சிவவாக்கியர் கூறுகிறார்.

No comments:

Post a Comment