Tuesday 5 March 2013

பாடல்கள் 36, 37, 38, 39 and 40



பாடல் 36
பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே!

(பத)  உள்ளமே கோயில் ஊனுடம்பே ஆலயம் என்பதை ஏற்றுக்கொள்ளாத மக்களிடம் அவர்கள் செய்யும் பூஜையை யார் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று சிவவாக்கியர் வினவுகிறார். எல்லாவற்றிற்கும் மூலமாக, எல்லாப் பொருட்களுமாக இருக்கும் இறைவனுக்கு அப்பொருட்களையே படைப்பது எவ்வாறு சாத்தியம்? இரண்டாக இருக்கும் பொருட்களில் ஒன்றை மற்றொன்றுக்குப் படைக்கலாம். ஒரே பொருள் இருக்கும்போது அதையே அதற்கு படைப்பது நடக்குமா?

பாடல் 37
இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்கநீறு பூசிலும் பிதற்றலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்த உண்மை கூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியை தொடர்ந்துகூட லாகுமே!

(பத) இறைவன் வேத மந்திரங்களிலும் பக்திப் பாடல்களிலும் மிகுதியாக திருநீறு பூசி ஸ்லோகங்கள் என்னும் பிதற்றலிலும் இல்லை.  அவன் உள்ளத்தை உருக்கி உட்கலந்துள்ளான். ஞான சங்கோசமற்ற அவன் இவ்வுண்மையைக் கூற வல்லாருடன் கூடியுள்ளான்.

பாடல் 38
கலத்தின் வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த தீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கிலே மனத்துளே கரந்ததே.

(பத) கலம் என்பது நம் உடம்பு. அதில் வைத்த நீர் என்பது பிறவியைக் கொடுக்கும் நீர்த்தன்மையுள்ள வஸ்துக்கள்.  தீ என்பது குண்டலினியின் அக்னி.  அத்தீயை மூட்டினால் உடலில் உள்ள சுக்கிலமும் சுரோணிதமும் மறைந்து விடுகின்றன.  அவை எங்கே மறைகின்றன? உடலினுள்ளா, குண்டலினி அக்நியினுள்ளா, உலகம் என்னும் மண்ணினுள்ளா, இறைவன் என்னும் பெருவேளியினுள்ளா என்று சிவவாக்கியர் கேட்கிறார். நிலம் என்பது மண்ணைக் குறிக்கும். மண் தன்னிலிட்ட விதையை முளைக்கச்செய்வதைப் போல ஒரு பெண் தன்னில் இட்ட விதையை ஒரு ஜீவனாக விளையச் செய்கிறாள். நீள் விசும்பு என்பது ஆகாயம். இது ஆணைக் குறிக்கும். மேலும், மண் என்பது இவ்வுலக வாழ்க்கையையும் வானம் பரந்த விழிப்புணர்வு நிலையையும் குறிக்கும்.  இவ்வாறு குண்டலினித் தீ விழித்தெழுந்தபோது பிறவியைக் கொடுக்கும் நீர் வஸ்து மறைந்து பிறப்பறுகிறது.

பாடல் 39
பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே

(பத) இப்பாடல் சிவவாக்கியரின் சமுதாய நோக்கைக் காட்டுவது.  இங்கு அவர் தீண்டாமையைச் சாடுகிறார்.  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.  இவ்வுலகில் பிறகும்போது மனிதரில் எவ்வித வேறுபாடும் இல்லை.  சிவவாக்கியர் மக்களிடையே வேறுபாடுகள் அவர்களது எலும்பு, மாமிசம், தோல் ஆகியவற்றில் குறிக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்கிறார். நமது மனத்தை அதன் மயங்கிய நிலையிலிருந்து விழித்தெழச் செய்ய நமக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியத்தையும் தருகிறார்.  ஒரு பணக்காரப் பெண்ணிடம் அனுபவிக்கும் போகத்திலும் ஒரு தீண்டத்தகாத பெண்ணிடம் அனுபவிக்கும் போகத்திலும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று அவர் கேட்கிறார்!
பறைச்சி பணத்தி என்று நாம் கூறுபவர்களைக் கூர்ந்து நோக்கினால் அவர்கள் இருவரும் விழிப்புணர்வின் வெளிப்பாடுகளே, அந்த விழிப்புணர்வே நம்முள்ளும் இருக்கிறது என்பதை உணருவோம் என்று கூறுகிறார் அவர்.

பாடல் 40
வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயில் எச்சில் போகஎன்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே

(பத) உயர்ந்த சாதியில் பிறந்தோம் என்று கூறுபவர்கள் பிறரைத் தீண்டத்தகாதவர், அவர் தொட்டவை எச்சில் என்று கூறுகின்றார்.  இப்பாடலில் சிவவாக்கியர் அத்தகையோர் பெரிதாகப் போற்றும் வேதம்கூட எச்சில்தான் என்று கூறுகிறார்! வாயில் குடித்த நீர் எச்சில் என்று கூறி மேலும் நீர் குடித்து அந்த எச்சிலை விளக்குவது எவ்வாறு சரியாகும்? முன் குடித்த நீருக்கும் பின்னர் குடித்த நீருக்குமிடையே வித்தியாசம் ஏதும் உள்ளதா?  அவ்வாறு வாயில் பட்டவை எச்சில் என்றால் அவ்வாயால் ஓதும் வேதமும் எச்சில் தானே? அதை மட்டும் பவித்திரமானது என்று எவ்வாறு கூறலாம் என்று சிவவாக்கியர் கேட்கிறார்.

இப்பாடலைப் படித்துவிட்டு சிவவாக்கியர் வேதத்துக்குப் புறம்பானவர் என்று கூறுவது தவறு.  அவர் சாடுவதுஅடித்தளமில்லாத கொள்கைகளையே ஆகும்.

2 comments:

  1. பனத்தி என்பது பார்பனத்தியைக் குறிப்பதாகும்.

    ReplyDelete
  2. நன்றி. நான் மற்ற பாடல்களில் இவ்வார்த்தையைச் சரியாகக் குறிப்பிட்டுளேனா என்று பார்க்கிறேன்.

    ReplyDelete