Thursday 7 March 2013

பாடல்கள் 41, 42, 43, 44 and 45



பாடல் 41
ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ளமந்திரங்கள் எச்சில்
போதகங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே

(பத) எச்சில் என்ற பதம் ஒன்றால் தீண்டப்பட்டது என்று பொருள்படும்.  இவ்வுலகில் உள்ளவையனைத்தும் இறைவனிடமிருந்து வந்தவை, அவனால் தீண்டப்பட்டவை.  அதனால் வேதம், மந்திரம், எல்லாவித இன்பங்கள், உலகங்கள், நாதம், பிந்து, அறிவு, இவையனைத்துமே எச்சில்தான். எதில்தான் எச்சில் இல்லை என்று சிவவாக்கியர் கேட்கிறார்.

பாடல் 42
பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்கனே
பிறந்துமண் இறந்துபோய் இருக்குமாற தெங்கனே
குறித்துநீர் சொலாவிடில் குறிப்பிலாத மாந்தரே
அறுப்பனே செவியிரண்டும் அஞ்செழுத்து வாளினால்

(பத) மக்களுக்குள்ளே வித்தியாசங்கள் அனைத்தும் பிறந்த பிறகு தோன்றுவன தானே!  நாம் ஒவ்வொருவரும் இப்பிறவி எடுப்பதற்கு முன்னும் இப்பிறவி முடியும்போதும் எவ்வாறு இருப்போம், எங்கே இருப்போம் என்று எண்ணினோமானால் இத்தகைய வித்தியாசங்களைப் பார்க்க மாட்டோம். அதனால் உலகமக்களிடம் சிவவாக்கியர் பிறப்பதற்கு முன்னும் இறந்த பின்னும் அவர்கள் நிலை என்ன என்று கேட்கிறார்.  இக்கேள்விக்கு அவர்கள் பதிலளிக்காவிட்டால் அவர்களது காதைப் பஞ்சாட்சார மந்திரம் என்னும் வாளினால் அறுப்பேன் என்று கூறுகிறார்.  சிவவாக்கியர் இக்கேள்விகளைக் கோபத்துடன் கேட்பதைப்போலத் தோன்றினாலும் உண்மையில் அவர் தமது கேள்விக்கான பதிலைத்தான் தருகிறார். பஞ்சாட்சர மந்திரம் நமது உண்மை நிலையை விளக்குகிறது.

பாடல் 43
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பார்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செம்பொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே

(பத) சிவத்தில் நிலைத்திருப்பதே மனத்தின் இயற்கை நிலை.  அதை விளக்க சிவவாக்கியர் பல இயற்கை நிகழ்வுகளை உதாரணமாகக் காட்டுகிறார்.  அம்பலமும் கடலும் நாம் கேட்டால்கூட அசங்குவதில்லை. அதேபோல் நிலைபெற்ற மனத்தை உடைய யோகியும் தெளிந்த நிலையில் உலக வாழ்வின் இருட்டு தன்னை அணுகாத வண்ணம் இருப்பார். செம்பொன் அம்பலம் என்பது சித்தாகாச்சம் என்னும் சிற்றம்பலம் ஆகும்.

பாடல் 44
சித்தம் ஏது சிந்தை ஏது சிவன் ஏது சித்தரே
சத்திஏது சம்புஏது சாதிபேதம் அற்றதேது
முத்திஏது மூலம் ஏது மூலமந்திரங்கள் ஏது
வித்தில்லாத விதத்திலே இன்னதென்று இயம்புமே

(பத) இறைவனின் தன்மையை விளக்கப் புகும் சிவவாக்கியர் முதலில் மக்களிடம் இறைமை என்றால் என்ன என்று கேட்கிறார்.  சித்தம், சிந்தை, சிவன், சக்தி, சம்பு, மந்திரங்கள் ஆகியவற்றை சந்தேகமற விளக்கவேண்டுகிறார் அவர்.

பாடல் 45
சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேதமற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந்திரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே!

(பத) இன்றைமை என்றால் என்ன என்ற முன் பாடலின் தொடர்ச்சியாக இப்பாடலில் தனது கேள்விக்குப் பதிலளிக்கிறார் சிவவாக்கியர். உலகில் புலன்களால் உணரப்படுபவை, அவற்றை உணரும் ஜீவன், அவற்றிற்கு முற்பட்ட நிலையான சக்தி, சம்பு, எல்லாம் உணர்ந்த முக்தி நிலை, மந்திரங்கள், வித்தைகள் ஆகியவை அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாத அதிசயிக்கத்தக்க வகையில் தோற்றுவித்த விதையே இறைமை என்கிறார் அவர்.

No comments:

Post a Comment